கனியினைப் பிழிந்து காய்ச்சிக்
கொட்டிய குவியல் தானோ?
மதியினை உடைத்துத் தூளாய்
மாற்றிய பொடியின் தூசோ?
இனிமையே எழுந்து சின்ன
இமயமாய் அமர்ந்த தாலோ?
என்னென்று சொல்வேன் இந்த
முசாமியா மணலின் குன்றை.
வெற்றிவேல் அழைத்து வந்தார்
வேண்டிய உணவி னோடு.
மற்றுமெம் மலர்ச பாவும்
மகிழ்வுந்து ஓட்டி வந்தார்
நெற்றியில் துளிர்த்த வேர்வை
நிலைத்தாற்போல் உப்புப் பூத்த
வெற்றிடப் பாலை கூட
வியனழகு தோற்று விக்கும்.
சிற்பத்தின் கூடம் தானோ?
சித்திரக் கூடம் தானோ?
அற்புத மலைகள் கூட்டம்
அழகிய சாலை ஊடே.
கற்பது சிறிதென் றாலும்
முயற்சியோ பெரிதென்றாற் போல்
உற்பத்தி அதிகம் இல்லை
உழைப்புக்கோ அளவே இல்லை.
-பெரியார்தாசன்